6
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமுடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

7
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

8
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

9
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
10
கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை முடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே