Vallalar.Net
Vallalar.Net
11
நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப
சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

12
பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும் 
பதியும்நல் நிதியும்உணர்வும்
சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
தீமைஒரு சற்றும்அணுகாத்
திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
செப்புகின் றோர்அடைவர்காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
இக்஑ழியங் கொடியும்விண்ணோர்
கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
கொண்டநின் கோலமறவேன்
தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

13
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் துண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

14
காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாள்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

15
கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொ லோகபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
உன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதையர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே