21
வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
வாழ்க்கைஅபி மானம்எங்கே
மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
மன்னன்அர சாட்சிஎங்கே
ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
நான்முகன் செய்கைஎங்கே
நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
இலக்கம்உறு சிங்கமுகனை
எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலைஎனில்
தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

22
மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
சிறுகுகையி னுட்புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

23
வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வௌ;விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்திர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

24
கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
கனிவுகொண் டுனதுதிரு அடியைஒரு கனவினும்
கருதிலேன் நல்லன்அல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
குற்றம்எல் லாம்குணம்எனக்
கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
குறைதவிர்த் தருள்புரிகுவாய்
பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
பிரணவா காராரின் மயவிமல சொருபமே
பேதமில் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

25
பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்பட்ட மனையில்நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்அன்றிப்
போய்ப்பட்ட புல்லுமணி புப்பட்ட பாடும்நற்
புண்பட்ட பாடுதவிடும்
புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
போகம்ஒரு போகமாமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
காட்பட்ட பெருவாழ்விலே
அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
அமர்போக மேபோகமாம்
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே