26
சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தைசெய்வோர்
செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
சிறுகருங் காக்கைநிகர்வார்
நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாதபேர்
நாய்ப்பால் விரும்பிஆன் துய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல்புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடியவெறு வீணராவார்
தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

27
பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும்ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ
இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம்
கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன்
தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

28
நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

29
உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவுமில்லை
உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
உனைஅன்றி வேறும்இல்லை
இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
இசைக்கின்ற பேரும்இல்லை
ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
றியம்புகின் றோரும்இல்லை
வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கும்இல்லை
வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
வன்மனத் தவனும்அல்லை
தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

30
எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமேநன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
முர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே
பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னைஇந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே