36
நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

37
கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத் தவருக் கருள்வோய்சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவா கியநல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

38
நங்கட் கிளியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

39
ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

40
மன்னே எனைஆள் வரதா சரணம்
மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவேல் அரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்