41
வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவைஇல் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

திருச்சிற்றம்பலம்

 பிரார்த்தனை மாலை 
கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

42
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

43
கண்முன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
மண்முன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
திண்முன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
வண்முன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே

44
மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே

45
அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே