46
மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே

47
நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே

48
அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே

49
கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோ நற் கடல்அமுதத்
தௌ;உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே

50
சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே