51
போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே

52
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே

53
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே

54
உனக்கே விழைவுகொண் டோ லமிட் டோ ங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே

55
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே