61
தௌ;அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே

62
அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே
துடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்
படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே

63
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் முழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே

64
என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே

65
சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே