66
மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே

67
தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
பணியாத பாவிக் கருளும்உண் டோ பசு பாசம்அற்றோர்க்
கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
அணிஆ தவன்முத லாம்அட்ட முர்த்தம் அடைந்தவனே

68
அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
கடையான நாய்க்குள் கருணைஉண் டோ தணி கைக்குள்நின்றே
உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே

69
பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே

70
பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே