71
சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே

திருச்சிற்றம்பலம்

 எண்ணப் பத்து 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

72
அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே

73
சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
மால்பி டித்தவர் அறியொனாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ

74
களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே

75
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்றிரு வரவினுக் கெதிர்பார்க்கும்
செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே