76
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே

77
குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் சூரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே

78
யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே

79
உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இர் உழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே

80
தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
முவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே