81
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே

திருச்சிற்றம்பலம்

 செழுஞ்சுடர் மாலை 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

82
ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே

83
பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே

84
கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே

85
மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே