91
அன்னே அப்பா எனநின்தாட் கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே

92
நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே

திருச்சிற்றம்பலம்

 நின் அருட்கார்வம் 

 குறைஇரந்த பத்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

93

சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே

94
தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே

95
தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ