96
உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோ ய்
தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே

97
கையாத அன்புடையார் அங்கைமேவும்
கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
உய்யாத குறைஉண்டே துயர்சொல் லாமல்
ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே

98
வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
தூய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே

99
ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே
100
வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
வாரிதியே தணிமைமலை வள்ள லேயான்
பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்