101
அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே

102
கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே

திருச்சிற்றம்பலம்

 ஜீவசாட்சி மாலை 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

103
பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

104
பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்நாய்
கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

105
புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே