116
வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
வருந்திஉறு கணவெயிலால் மாழாந் தந்தோ
தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

117
வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
பாழான மந்தையர்பால் சிந்தை வைக்கும்
பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
இன்பமே என்அரசே இறையே சற்றும்
தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

118
உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
இளந்தளிர்போல் நலிந்திரந்திங் சூழலும் இந்த
ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலு ர் மன்னே
தளந்தரும்பரூஙதஇம் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே
119
கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

120
கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
கரைந்துருகி எந்தாய்நின் கருணை கானா
தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே