121
பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
மாவல்வினை யுடன்மெலிந்திங் சூழல்கின் றேன்நின்
மலர்அடியைப் பேற்றேன்என் மதிதான் என்னே
தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

122
கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

123
உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
தௌ;ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

124
வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

125
ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
டோ ய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
பார்ஆதி அண்டம்எலாம் கணக்கில் காண்போய்
பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே