126
வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
வஞ்சகன்என் றேமறுத்து வன்கணாநீ
போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

127
மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோ என்
சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

128
மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்ற
அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

129
முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
முடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
தந்தைவழி நில்லாத பாவி என்றே
தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

130
பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

திருச்சிற்றம்பலம்

 ஆற்றா முறை 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்