131
விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்அ றாத்துயர்க் கடலுள் முழ்கியே
இயங்கி மாழ்குவேன் குலவும் போரி வாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே
 போரி-திருப்போருர்

132
வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
நாய காதிருத் தணிகை நாதனே

133
எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
கருதி டாதுழல் கபட னேற்கருள்
நண்ணி வந்திவன் ஏழை யாம்என
நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே

134
கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
பாவி யேன்படும் பாட னைத்தையும்
பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே

135
சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
நித்த நின்அருள் நீதி ஆகுமால்
தந்தை தாய்என வந்து சீர்தரும்
தலைவ னேதிருத் தணிகை நாதனே