141
நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே

142
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரை மலர்ப் பதம்போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே

143
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே

144
மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றோ
தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே

145
பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே