146
வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே

147
தேனும் தௌ;ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே

148
குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே

149
தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
முவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே

150
வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே

திருச்சிற்றம்பலம்

 கருணை மாலை

கலிவிருத்தம்

திருச்சிற்றம்பலம்