151
சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
மங்க லம்பெற வைத்த வள்ளலே
தங்க ருள்திருத் தணிகை ஐயனே

152
ஐய னேநினை அன்றி எங்கணும்
பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
மெய்ய னேதிருத் தணிகை வேலனே

153
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
சால நின்றவன் தணிகை நாயகன்
வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே

154
நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே

155
கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே