156
செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ

157
என்னை என்னைஈ தென்றன் மாதவம்
முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே

158
அண்ணி லேன்நினை ஐய நின்அடி
எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்
புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்
தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே

159
அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே

160
வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே