161
வெற்ப னேதிருத் தணிகை வேலவனே
பொற்ப னேதிருப் போரி நாதனே
கற்ப மேல்பல காலம் செல்லுமால்
அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே

162
சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
டுறில் கண்களால் உண்ண எண்ணினேன்
ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ

163
முற்று மோமனம் முன்னி நின்பதம்
பற்று மோவினைப் பகுதி என்பவை
வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே

164
அத்த னேதணி காச லத்தருள்
வித்த னேமயில் மேற்கொள் வேலனே
பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே

165
ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
சாதி வான்பொழில் தணிகை நாதனே
ஈதி நின்அருள் என்னும் பிச்சையே