166
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
பச்சை மாமயில் பரம நாதனே
கச்சி நேர்தணி கைக்க டம்பனே

167
கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ

168
என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே

169
தேவ நேசனே சிறக்கும் ஈசனே
பாவ நாசனே பரம தேசனே
சாவ காசனே தணிகை வாசனே
கோவ பாசனே குறிக்கொள் என்னையே

170
குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே