171
தணிகை மேவிய சாமி யேநினை
எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே

172
உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே

173
செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
சைவ நாதனே தணிகை மன்னனே

174
மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
தன்னில் நின்றிடும் தணிகை மேலனே

175
மேலை வானவர் வேண்டும் நின்திருக்
காலை என்சிரம் களிக்க வைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
வேலை ஏந்துகை விமல் நாதனே