181
சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே

182
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் னேன்நின் திருக்கருணை
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே

183
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
அணியே தணிகை அரசேதௌ; அமுதே என்றன் ஆருயிரே
பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே

184
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால்
வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே

185
அரைசே அடியர்க் கருன்குகனே அண்ணா தணிகை ஐயாவே
விரைசேர் கடம்பமலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே