186
தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே

187
குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே

188
இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
திருப்பேர் ஒளியே அருட்கடலே தௌ;ளார் அமுதே திருத்தணிகைப்
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே

189
போதா நத் அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே

190
எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே

திருச்சிற்றம்பலம்

 பொறுக்காப் பத்து

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்