196
கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
அடியர்பால் சேத்திடில் உய்வேன்
தற்பரா பரமே சற்குண மலையே
தணிகைவாழ் சரவண பவனே

197
பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
பரஞ்சுடர் நின்அடி பணியும்
புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர் தம்முடன் கூட்ட
நினைந்திடில் உய்குவன் அரசே
சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
தணிகைவாழ் சரவண பவனே

198
நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
நின்அடிக் கமலங்கள் நினைந்தே
போற்றிடா தவர்பால் பெய்யனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
ஆச்செயில் உய்குவன் அமுதே
சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
தணிகைவாழ் சரவண பவனே

199
பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
பாததா மரைகளுக் கன்பு
புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
திருவுளம் அறிகிலன் தேனே
சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
தணிகைவாழ் சரவண பவனே

200
எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
ஏத்திடா தழிதரும் செல்வப்
புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
கலந்திடில் உய்குவன் கரும்பே
தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே
தணிகைவாழ் சரவண பவனே

திருச்சிற்றம்பலம்

 வேட்கை விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்