201
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே

202
இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ

203
வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருதுவாயே அன்றிஅருள்
உருவாய் வந்து தருவாயே தணிகா சலத்துள் உற்றமர்ந்த
ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே

204
உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோஉரைக்கடங்காப்
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே

205
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தௌ;ளமுதே
விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
வெஞ்சொல் புகழும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே