221
கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே

222
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே

223
சேவி யாதஎன் பிழைகளை என்னுறே சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே

224
துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே

225
என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கும் துயர்உண்டேன்
கன்செய் பேன்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே