226
மண்ணில் நண்ணிய வஞ்சகர் பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
கண்ணில் நண்ணரும் காட்சியே நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
எண்ணி எண்ணிநெஞ் சழிந்துகண் ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
புண்ணில் நண்ணிய வேல்எனத் துயர்உறில் புலையன்என் செய்கேனே

227
மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே

228
சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே

229
வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருள்ஆளா
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
வேழ்வி ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே
 கேழ்வி வேழ்வி என்பன எதுகை நோக்கித் திரித்தவாறு தொவே

230
என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே


 பணித்திறம் வேட்டல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்