231
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே

232
பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே

233
வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ

234
கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே

235
தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
கனியேநின் வேடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே