236
இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்எணிகள் இயற்றி டேனோ
தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே

237
சிறியேன்இப் போதெகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென் பதைவிடுத்திவ் வகில மாயை
முறியேனோ உடல்புளகம் முடேனோ நன்னெறியை முன்னி இன்றே

238
முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும் அவர்க் கிதங்கூ றேனோ

239
கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே

240
தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ

திருச்சிற்றம்பலம்

 நெஞ்சொடு புலத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்