241
வாவா என்ன அருள்தணிகை வருந்தை என்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
முவா முதலின் அருட்கேலா முட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ

242
வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ

243
வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ

244
காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே

245
தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமேநீ
தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே
 நலித்திங்கவமே தொவேமுதற்பதிப்பு, சமுகபதிப்பு