246
தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே

247
நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் முட முழுநெஞ்சே
அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே

248
இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே

249
நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தோன்
மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே

250
கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் கசத்தின் மடவார் தம்மயலாம்
கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
எள்ளும் படிவத் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ