251
இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே

திருச்சிற்றம்பலம்


 புன்மை நினைந் திரங்கல் 
கட்டளைக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

252
மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே

253
முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
காச லத்தமர்ந் தோங்கதி காரனே

254
வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
நாயி னேன்உனை நாடுவு தென்றுகாண்
கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
தணிகை மாமலைச் சற்குரு நாதனே

255
பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
வேல னேதணி காசல மேலேனே
தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
தெய்வ யானை திருமண வாளனே