261
கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
பெருமை கட்டும் பெருந்தணி கேசனே

திருச்சிற்றம்பலம்

 திருவடி சூட விழைதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

262
தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
கானார் கொடிஎன் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

263
தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

264
மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

265
ஆறத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே