266
விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

267
வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே
அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

268
தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வளமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

269
கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

270
கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதனிக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே