271
பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே

திருச்சிற்றம்பலம்

 ஆற்றா விரகம் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

272
தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே

273
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே

274
செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
மெய்கொள் புளகம் முடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டுடேனோ புவிமீ திருகால் மாடேனே

275
வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே