276
நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
காட்டும் அவர்த்எள் கண்ணோனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே

277
காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
மாமற் றொருவீ டடுப்பாரோ மன்ததில் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே

278
காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே

279
வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னரோ
இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே

280
தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே