281
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே
 ஏழைமையின் இரங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

282
தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து தலிகின்ற செய்கை நலமோ

283
தலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே

284
மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
பணியேன் நினைந்து கதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
எணியே நினைக்கில் அவமாம்இவ் வேலைழ எதுபற்றி உய்வ தரசே

285
உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன்
மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ