286
நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம்
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை
எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன்
தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே

287
இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கிஇழுதென்ன நெஞ்சம் இளகேன்
மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட்டலங்கல் அணியேன்
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே

288
அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
தவம்நாடும் அன்ப ரோடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
இவன்ஆர் அவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே

289
எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்த்த அமுதே

290
முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே

திருச்சிற்றம்பலம்

பணித்திறஞ் சாலாப் பாடிழிவு 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்