291
அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம்செய் தேதுரத் தமிழ்ச்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

292
திரப்படுவேன் மைல்புரி மாய வாழ்வில்
தியங்குவேன் சிறிதேனும் தெளிபொன் றில்லேன்
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

293
செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

294
சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

295
காமாந்த காரியாய் மாதர் அல்குல்
கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
நாயகமா மணியேநல் நலமே உன்றன்
பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே