296
நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

297
அல்லார்க்கும் சூழலார்மேல் ஆசை வைப்பேன்
ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

298
அரும்பாய நகைமடவார்க் காளாய் வாயா
அலைக்கின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
திருப்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
இடும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

299
அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

300
பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
கைகுவியேன் மெய்குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

திருச்சிற்றம்பலம்

பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்