301
வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திரைங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துன் உருக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியாஉன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே

302
வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சனனப் பெருவேரைக்
கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

303
உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

304
போதல் இருத்தல் எனநினையாய்ப புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

305
வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே