306
மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

307
இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

308
விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

309
பள்ள உலகப் படுகுழியில் பரிந்திங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

310
அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
விடலை எனமு வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடைஅளவற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

திருச்சிற்றம்பலம்

பணித்திறஞ் சாலாமை
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்