311
வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே

312
வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
மால்நிகழ் பேதையேன் மதித்தி லேனையோ
தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே

313
கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
மருங்கமர்ந் தனப்ருள் மன்னும் வாழ்வையே

314
வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே

315
செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே