316
பொதித்தரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே

திருச்சிற்றம்பலம்

 குறை நேர்ந்த பத்து
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

317
வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

318
மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே

319
வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேதான்
நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே

320
பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே